தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் மர்ம நபர்கள்
- 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து அவ்வப்போது மர்ம நபர்கள் தண்ணீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலசபாக்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் நீர் செய்யாற்றில் செங்கம், காஞ்சி, கடலாடி, மாதிமங்கலம், எலத்தூர், பழங்கோவில், பூண்டி கலசபாக்கம், போளூர், ஆரணி வழியாக செல்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன்படி முதல் கட்டமாக கலசபாக்கம் அருகே ஆணைவாடி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டன. இதன் மூலம் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றன.
இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து வருகின்றனர்.தற்போது மழை நின்ற காரணத்தால் தடுப்பனையில் சுமார் 7 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த தண்ணீரை மர்ம நபர்கள் மணல் கொள்ளை அடிப்பதற்காகவும் மற்றும் மீன்பிடிப்பதற்காகவும் இரவில் தடுப்பணையில் உள்ள ஷட்டரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் குறைந்து தற்போது 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக விவசாயிகள் கலசபாக்கம் தாசில்தார் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்