தமிழகத்தில் சாலை போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள்- விபத்துக்களை தவிர்க்க புதிய திட்டம்
- போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஷ் போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா பொருத்தப்பட வேண்டும்.
- மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் வைக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் வைக்கப்படும்.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது மட்டுமின்றி போக்குவரத்து போலீசார் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஷ் போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா பொருத்தப்பட வேண்டும். அதே போல் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதிக வேகம், ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்தி செல்லுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்காணித்து விதிமீறும் வாகனங்களின் டிரைவர்களுக்கு 15 நாட்களுக்குள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அபராதம் விதிக்க புதிய நடைமுறை செயல்படுத்தப்படும்.
இதில் தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்.
அபராத சீட்டை பெற்றுக்கொண்டு இணைய தளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் அபராத தொகையை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.