சாக்கடை வசதி அமைக்கக்கோரி காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
- சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் குடியிருப்புகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த பணியும் செய்யாமல் இருப்பதால் குடியிருப்புகள் முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் செய்ய முடியாமல் அவதியில் உள்ளனர்.
நேற்று அப்பகுதி மக்கள் காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலர் மயில்வாகனத்திடம் கால்வாய் அமைக்க மனு வழங்கினர். பேரூராட்சி தலைவர் குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தரப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.