உள்ளூர் செய்திகள் (District)

நாமக்கல் சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.28 ஆயிரம் அபராதம்

Published On 2022-11-10 09:46 GMT   |   Update On 2022-11-10 09:46 GMT
  • திருச்சி ரோட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.
  • இந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு விற்பனையை பெருக்குவதற்காக பொருட்கள் வாங்குவோருக்கு குலுக்கல் பரிசு திட்டத்தை அறிவித்தது.

நாமக்கல்:

நாமக்கல், திருச்சி ரோட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு விற்பனையை பெருக்குவதற்காக பொருட்கள் வாங்குவோருக்கு குலுக்கல் பரிசு திட்டத்தை அறிவித்தது. அதன்படி ரூ.2,000, ரூ.1,500 மற்றும் ரூ.1000-க்கு பொருட்கள் வாங்கினால் பரிசு குலுக்களில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள், ஏ.சி, வாஷிங் மெஷின் மற்றும் வெள்ளி காசு வெல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

அக்கடை வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 2015, ஆகஸ்ட் 3-ந் தேதி ரூ.1808-க்கு பொருட்கள் வாங்கினார். அதற்கான ரசீதும், கூப்பனும் பெற்றார். கூப்பனின் ஒரு பகுதியை அங்குள்ள பெட்டியில் போடுமாறு சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கூறினர்.

இந்நிலையில், பரிசுகள் கிடைக்கும் என்ற பேராசையை மக்களுக்கு தூண்டி, தன் நிறுவனத்தின் விற்பனையை பெருக்குவதே இதன் நோக்கம் எனவும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படியும் தமிழ்நாடு பரிசு திட்டங்கள் தடை சட்டத்தின் படியும் இது நேர்மையற்ற வணிக முறையாகும் என்று கூறி, அந்த வாடிக்கையாளர் தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் மூலம் 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம் சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் நிறுவனம் நுகர்வோர் நலநிதிக்கு ரூ.5000, வழக்கு செலவாக ரூ.23,000 என மொத்தம் ரூ. 28,000-ஐ 2 மாத காலத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்தவும் உத்தரவிட்டது. 

Tags:    

Similar News