தஞ்சையில் இன்று இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்
- அசைவம் சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தை பெரும்பாலான இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
- ஆவணி மாதம் முடிவடைவதால் இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தஞ்சாவூர்:
நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோவிலுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை பெரும்பாலான இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வர்.இதனால் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள்.
இந்நிலையில் இன்றுடன் ஆவணி மாதம் முடிவடைவதால் இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தஞ்சை மீன்சந்தையில் இன்று காலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். சில வகை மீன்களின் விலை உயர்ந்தாலும் அவற்றின் விற்பனை பாதிக்கபடவில்லை.
இதேப்போல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றனர். பல கடைகளில் மக்கள் வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.