நாளை குடியரசு தினவிழா; தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- தஞ்சை பெரிய கோவில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிரம்.
- போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் எளிமையான முறையில் நடந்த குடியரசு தின விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், பூண்டி மாதா தேவாலயம், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை, பாபநாசம் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.
ரயிலில் ஏறியும் இருப்பு பாதை மற்றும் பாதுகாப்பு படை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். தண்டவாளங்களில் நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
மேலும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர கடல் வழியாக சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, சேதுபாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளிலும் கடலோர போலீஸார் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.