ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- 2 நாள் விடுமுறையால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
- ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த நாட்களில் 16,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனா்.
ஊட்டி,
ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவடைந்திருந்தாலும், அப்போது தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, ஊட்டிக்கு வரமுடியாத சுற்றுலா பயணிகள் தற்போது ஊட்டிக்கு தொடா்ந்து வருகின்றனா். இதில், ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த நாட்களில் 16,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனா்.
அதேபோல, ஊட்டி அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2 நாள்களில் சுமாா் 10,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். ஊட்டி படகு இல்லத்திற்கு சுமாா் 9000 பேரும், பைக்காரா படகு இல்லத்திற்கு 6000 பேரும் வந்துள்ளனா். இதுதவிர, வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள அவலாஞ்சி, பைக்காரா நீா்வீழ்ச்சி, பைன் பாரஸ்டு, சூட்டிங் மேடு மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் உள்ளது. தற்போது தசரா பண்டிகை காலமென்பதால், கா்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் அக்டோபா் முதல் வாரத்தில்தான் விடுமுறை அளிக்கப்படும். இதனால், அக்டோபா் மாதத்திலும் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.