ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
- தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்:
கர்நாடகா மாநிலத்தில் கொட்டிய கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 2. 50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அப்போது மேடடூர் அணையிலிருந்து நீரை திறந்து விட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்ததன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சென்று பார்வையிடவும் குளிக்கவும் அனுமதி இல்லை. அங்கு பராமரிப்பு பணிகள் நடத்து வருவதால் தற்போது அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகள் வருவதால் அப்பகுதியில் உள்ள வறுத்த மீன் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை அதிகரிக்கும் . அண்ணா பூங்கா திறப்பால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.