உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள படப்பிடிப்பு வாகனங்கள்.

தாண்டிக்குடியில் சினிமா படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-12-29 07:16 GMT   |   Update On 2022-12-29 07:16 GMT
  • தாண்டிக்குடி அருகே கடந்த 2 வாரங்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
  • போக்குவரத்துக்கு இடையூறாக சூட்டிங் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

பெரும்பாறை:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர்விடுமுறை காரணமாக தற்போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மட்டுமின்றி மேல்மலை கிராமங்கள் மற்றும் கீழ்மலை கிராமங்களிலும் அவர்கள் சென்று பல்வேறுசுற்றுலா இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் சுற்றுலா விடுதிகள் நிரம்பி வழிகின்றன.

முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாண்டிக்குடி அருகே கடந்த 2 வாரங்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வத்தலக்குண்டு-தாண்டிக்குடி சாலையில் சூட்டிங் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மலை சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த சாலையில் ஒருபுறம் வாகனம் வந்தால் எதிர்திசையில் வரும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சூட்டிங் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அனுமதிபெற்று நடக்கிறதா அல்லது அனுமதி இல்லாமல் நடக்கிறதா என்றும் தெரியவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சூட்டிங் நடத்தவேண்டும் என்றுதான் அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள். ஆனால் இப்பகுதியில் நடத்தப்படும் படப்பிடிப்பால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளிகள் தொடங்கிய பிறகு மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News