ரெயில் கால அட்டவணை மாற்றம்:நெல்லை-செங்கோட்டை ரெயிலின் வேகம் அதிகரிப்பு-நாளை முதல் அமலுக்கு வருகிறது
- நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- பாலருவி விரைவு ரெயில் நெல்லையில் இருந்து வ 11.30-க்கு புறப்படுகிறது.
தென்காசி:
நெல்லை-கொல்லம் இடையே கடந்த சில மாதங்களாக மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை-செங்கோட்டை இடையே பணிகள் நிறைவு பெற்றுவிட்டது.
இதையடுத்து இந்த வழித்தடத்தில் நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 70 கிலோமீட்டரில் இருந்து 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் ரெயில்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரெயில்(16791) நெல்லையில் இருந்து வழக்கமான நேரமான 11.20-க்கு பதிலாக 11.30-க்கு புறப்படுகிறது. தென்காசிக்கு வழக்கமான நேரமான 12.35 மணிக்கு செல்லும். பாலக்காடு - நெல்லை விரைவு ரெயில்(16792) செங்கோட்டைக்கு வழக்கமான நேரமான அதிகாலை 3 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 4.40 மணிக்கு வந்தடைகிறது.
காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை - செங்கோட்டை ரெயில் செங்கோட்டையை 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.05-க்கு சென்றடையும். காலை 9.10-க்கு புறப்பட வேண்டிய ெரயில் 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டையை மதியம் 11.50-க்கு சென்றடையும்.
இதேபோல் மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு வழக்கமான மணியை விட 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவும் சென்றடைகிறது. மறுமார்க்கமாக காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரெயில் நெல்லை டவுன் வரை வேகம் அதிகரிக்கப்பட்டு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அதே நேரமான 8.50 மணிக்கு வந்தடையும்.
காலை 10.05 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக இரவு 12.15 மணிக்கும், மதியம் 2.55-க்கு புறப்படும் ரெயில் 20 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மதியம் 11.50 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் செங்கோட்டை - மதுரை ரெயில் 11.50 மணிக்கு பதிலாக 12.10 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு மாலை 3.40 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.