மாணவர்களுக்கு கல்வெட்டு குறித்த பயிற்சி முகாம்
- நாகையில் மாணவர்களுக்கு பழங்கால கல்வெட்டு குறித்த பயிற்சி முகாம் நடை பெற்றது.
- முகாமில் மாணவர்கள் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட அருங்காட்சியகமும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
முதல் நாள் பயிற்சியில்,மாணவ-மாணவிகள் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
அப்போது அருங்காட்சியக ஊழியர்கள், அங்குள்ள புதைபொருட்கள் பற்றியும், அவை கண்டெடுக்கப்பட்ட இடம், காலம் ஆகியவை குறித்தும் மாணவ - மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.பின்னர் நாகை காயாரோகண கோவில் சென்று நேரடியாக கல்வெட்டு படி எடுத்தல், ஓலைச்சுவடி அமைப்பு முறை, வடிவம், பராமரிப்பு ஆகியவற்றை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து 2-ம் நாள் பயிற்சியில் மதுரை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியர், கல்வெட்டுகள் எழுத்துமுறை, கிரந்த, பிராமி, வட்டெழுத்துக்கள், குறியீடு, கல்வெட்டுகள் தோன்றிய விதம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
முகாமில் கல்லூரி முதல்வர் பொன்னி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.