உள்ளூர் செய்திகள்

திலேப்பியா மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

சிறுநல்லிக்கோவில் கிராமத்தில் திலேப்பியா மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி

Published On 2022-06-29 08:19 GMT   |   Update On 2022-06-29 08:19 GMT
  • சிறுநல்லிக்கோவில் கிராமத்தில் திலேப்பியா மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது.
  • மீன்வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு அளித்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம் சிறுநல்லிகோயில் கிராமத்தில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் நடைபெற்றது. பயிற்சியை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கிவைத்து வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ரவி கலந்து கொண்டு மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள், பண்ணைக்குட்டைகளில் அவைகளை வளர்க்கும் தொழில்நுட்பங்கள், திலேப்பியா மீன்களின் துரித உடல் எடை வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய தீவன மேலாண்மை மற்றும் விற்பனை வழிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராகி நலவாரிய அட்டை பெற்றிருக்கும் மீன் வளர்க்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை குறித்தும் விளக்கினார்.

சிறுநல்லிகோயில் கிராமத்தில் மீன்பண்ணை அமைத்து மீன்சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி ராஜு மீன்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பது, மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள், தீவன மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மீன்வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு விளக்கவுரை அளித்தார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன், உழவர் ஆர்வலர் குழு நிர்வாகி சரவணன், உழவர் நண்பர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News