உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் இலைதழைகளுடன் நடனமாடிய சிறுவர்கள்.

உடல் உழைப்பு காரணமாக பழங்குடியினருக்கு பருமன் ஏற்படுவதில்லை தொல்குடிகள் விழாவில் பேச்சு

Published On 2022-08-11 04:52 GMT   |   Update On 2022-08-11 04:52 GMT
  • காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
  • விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஓரக்கொம்பு கிராமத்தில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை வகித்து பேசியதாவது,

பளியர், பழங்குடியின மக்கள் பல்வேறு போராட்டங்களை கடந்து வாழ்ந்து வருகின்றனர். நவீன வளர்ச்சிகள் பெருகினாலும் எந்த ஒரு இனமும் தனது பாரம்பரியத்தை இழந்துவிடக்கூடாது. உலகெங்கும் வாழ்கின்ற மக்கள் உடல் பருமன் நோயினால் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது.

ஆனால் பளியர் சமூக மக்கள் கடுமையான உழைப்பாளிகளாவும், நடைப்பழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களிடம் உடல் பருமனான ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை என்றார்.

எழுத்தாளர் முத்துநாகு சிறப்புரையாற்றி பேசுகையில்,

பழங்குடியின மக்களில் பளியர், புழையர், முதுவர் ஆகிய 3 இன மக்கள்தான் சுற்றுச்சூழலை நன்கு அறிந்தவர்களாகவும், தங்களை சுற்றி இருக்கின்ற தாவர இனங்களை அடையாளம் காண்கின்ற மரபு அறிவு உடையவர்களாகவும் உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 12 ஏக்கர் நிலம் வரைக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என வனச்சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. பழங்குடியின மக்கள் மரபானஅறிவினை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல பழங்குடியினருக்கான உரிமைகளை பெறுவதற்காக ஊர்தலைவர் ஒருங்கிணைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் பங்கேற்று பழங்குடியினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார்.

பேராசிரியர் முத்தையா, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர் முருகன், கே.சி.பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, இளையராஜா, வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, குழந்தைகள் இல்லச்செயலாளர் ஸ்டான்லி மனோகரன், கொரன்கொம்பு வனக்குழு தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற குழுச்செயலாளர் முருகேசன், சதாசிவம், எழுத்தாளர் பாரததேவி, பேராசிரியர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஊர்தலைவர் சங்கர் நன்றி கூறினார். விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாறைப்பட்டி நல்லூர்காடு, கோரம்கொம்பு, கள்ளக்கிணறு, கருவேலம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்கலைக்கழகத்தின் குழல்இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News