தமிழ்நாடு

தி.மு.க. நிர்வாகி கொலையில் அண்ணன் கைது

Published On 2024-09-15 06:54 GMT   |   Update On 2024-09-17 11:08 GMT
  • அண்ணன்-தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
  • அண்ணன், தம்பி 2 பேரும் சவுந்தர் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினர்.

திருச்சி:

திருச்சி கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடை மகன்கள் ரமேஷ் (வயது 50), பிருத்விராஜ் (48). திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழுவில் துணை அமைப்பாளராக பிருத்விராஜ் பொறுப்பு வகித்து வந்தார். பிருத்விராஜூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு பிருத்விராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த தேர்தல் ரத்து ஆனதுடன், மீண்டும் நடந்த தேர்தலில் அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அண்ணன்-தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பிற்பகலில் வீட்டின் 3-வது மாடியில் உள்ள தனி அறையில் அண்ணன், தம்பி 2 பேரும் சவுந்தர் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினர்.

அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ரமேசும் அவருடைய நண்பர் சவுந்தரும் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். மாலையில் நீண்ட நேரமாகியும் பிருத்விராஜ் கீழே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடிக்கு சென்று பாா்த்தனர்.

அங்கு பிருத்விராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் உடற்பயிற்சி செய்யும் கர்லா கட்டை ரத்தக்கறையுடன் கிடந்தது. உடனே இதுபற்றி கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாடியில் அமர்ந்து 3 பேரும் மது அருந்திய போது, தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ரமேஷ் அங்கிருந்த கர்லா கட்டையால் தனது தம்பி பிருத்விராஜை அடித்து கொலை செய்ததும், பின்னர் ரமேசும், சவுந்தரும் அங்கிருந்து தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பிருத்விராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்தநிலையில் பிருத்விராஜின் அண்ணனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

தேர்தல் தொடர்பான முன் விரோதத்தில் தம்பியை கொலை செய்ததாக கைதான பிருத்விராஜின் அண்ணன் ரமேஷ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவருடைய நண்பரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News