திருவெறும்பூர், துவாக்குடி பகுதியில் 2 போலி மருத்துவர்கள் சிகிச்சை?
- திருவெறும்பூர், துவாக்குடி பகுதியில் 2 போலி மருத்துவர்கள் சிகிச்சை? மருத்துவ அதிகாரி புகாரின் பேரில் வழக்குப்பதிவு
- போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42). இவர் மருத்துவம் படிக்காமல் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை மேட்டுத்தெரு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து திருச்சி முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்துள்ளார்.அதில் அரசின் அனுமதி பெறாமல், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக சுரேஷ்குமார் பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் சுரேஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதேபோன்று துவாக்குடி அசூர் கட் ரோடு வாடகை கட்டிடத்தில் மண்ணச்சநல்லூர் அழகு நகர் பகுதியைச் சேர்ந்த கலைமணி (72) என்பவரும் அரசின் அனுமதியின்றி இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக டாக்டர் கோவிந்தராஜன் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போலி டாக்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனித உயிர்களுடன் விளையாடும் இதுபோன்ற போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.