23 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- மலேசியாவிற்கு கடத்தவிருந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும் திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.இதே போல் வெளிநாட்டு கரன்சி மற்றும் அரியவகை ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தி வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது.இந்த விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ராம் பிரபு (வயது 39). என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சோதனை செய்தனர்.அப்போது அவரிடம் 23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.