உள்ளூர் செய்திகள் (District)

மாநகரில் குவிந்த 550 டன் தீபாவளி குப்பை

Published On 2022-10-25 09:10 GMT   |   Update On 2022-10-25 09:10 GMT
  • மாநகரில் 550 டன் தீபாவளி குப்பை குவிந்தது.
  • அகற்றும் பணியில் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள்

திருச்சி:

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையால் சுமார்550 டன் குப்பை கூடுதலாக குவிந்தது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த ஐந்து மண்டலங்களில் சுமார் 2.45 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளன.

550 டன்

இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் என்எஸ்பி ரோடு மற்றும் மலைக்கோட்டை, முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலி பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என இன்று மாநகரில் சுமார் 550டன் குப்பை குவிந்தது. இதனால் பெரிய கடை வீதி, என்எஸ்பி ரோடு மற்றும் சிங்காரத்தோப்பு பகுதிகளில் ஆங்காங்கே குப்பை குவியல்கள் மலை போல காட்சியளித்து வருகிறது.

1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள்

தீபாவளி மறுநாளான இன்று, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கடை வீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பைகளை மற்றும் பட்டாசு வெடித்த பேப்பர்களை கூட்டி சுத்தம் செய்து ஆங்காங்கே குவித்து வைக்கும் பணியில் 1200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகரில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மாநகராட்சி குப்பை வாகனத்தில் குப்பைகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் குப்பை குவியல்கள் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

அதே நேரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை அள்ளும்போது பயன்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு கையுறை மற்றும் காலணிகள் வழங்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News