உள்ளூர் செய்திகள்

ரூ.17.50 லட்சம் மோசடியில் இருந்து தப்பிக்க பாலியல் குற்றச்சாட்டு

Published On 2023-10-12 08:18 GMT   |   Update On 2023-10-12 08:18 GMT
  • ரூ.17.50 லட்சம் மோசடியில் இருந்து தப்பிக்க பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவதாக புகார்
  • பணத்தை இழந்த கரூர் வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் புகார்

திருச்சி,

கரூர் சரவணா நகர் நத்தமேடு சோழியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்(வயது 57) இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-நானும் சில பங்குதாரர்களும் சேர்ந்து கரூரில் பழைய பேப்பர் தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் திருச்சி உறையூர் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி அவரது உறவினர் மூலமாக எனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு திருச்சியில் பழைய பேப்பர் வாங்கி விற்கும் தொழிலை நடத்தலாம் என கூறினார்கள்.

பின்னர் எனது பங்காக ரூ. 5 லட்சம் ரொக்கமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் அவர் தனது மகள் கணவர் மற்றும் இன்னொருவருடன் கரூர் வந்தார். வாங்கிய பணத்தை திரும்ப தந்து விடுகிறோம்.

இப்போது மருமகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவரை காப்பாற்ற பணம் வேண்டும் என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து நான் கம்பெனி பணம்ரூ.12 லட்சம் 50 ஆயிரம் தொகையை சிறிது சிறிதாக கொடுத்தேன். ஆனால் பணத்தை திரும்பத் தரவில்லை.அதைத்தொடர்ந்து நான் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி அவர்கள் மீது உறையூர் போலீசில் புகார் செய்தேன். இந்த நிலையில் தற்போது அந்த அந்த பெண்மணியின் மகளை கர்ப்பமாக்கி கருவை கலைத்ததாக ஒரு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.அந்தப் பெண்ணை நான் தனியாக சந்திக்கவில்லை. எனது கம்பெனி பணம் ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பத் தராமல் என் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்துள்ள 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News