சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க துணிய வேண்டும் - போலீசாருக்கு திருச்சி கமிஷனர் அறிவுரை
- காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.
- பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்
திருச்சி
திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதல் அணி மைதானத்தில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் மு.ஆனந்தன் விழாவை ஒருங்கிணைத்தார். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த 274 பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், பயிற்சி முடித்த நீங்கள் காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் பேணிக்காக்கும் வகையில் உங்கள் பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. காவல் பணி என்பது பொதுமக்களிடம் கனிவையும், அன்பையும் காட்ட வேண்டும். கயவர்களையும், சமூக விரோதிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க துணிய வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானம் மற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் உள்ளிட்ட 622 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாக்களும் நடைபெற்றன. மேற்கண்ட விழாக்களில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.