2 ஆம்னி பேருந்துகளை அபகரித்து விற்க முயன்ற தொழில் அதிபர்
- மறைந்த நண்பரின் 2 பேருந்துகளை எடுத்து சென்றவர் திருப்பி தர மறுப்பு
- திருப்பி கேட்ட நண்பரின் மனைவிக்கு கொலை மிரட்டல்
ராம்ஜிநகர்,
திருச்சி மாவட்டம் தீரன்நகர் வாஞ்சிநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமோகன்(வயது56). இவரது மனைவி சித்ரா(45) . இவர் வங்கியில் கடன் வாங்கி இரண்டு ஆம்னி பேருந்துகளை வைத்து டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். மணிமோகன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் மணிமோகனின் நண்பர் மணப்பாறையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் பங்குதாரர் கலைச்செல்வன் என்பவர் மணிமோகனின் மனைவி சித்ராவிடம் சென்று திருச்சியில் 2 ஆம்னி பேருந்துகளும் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்றும் எனவே தனது பாதுகாப்பில் மணப்பாறையில் இருக்கட்டும் என்றும் கூறி பேருந்துகளை மணப்பாறைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்தைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படையுங்கள் நான் வங்கி கடனை அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு கலைச்செல்வன் உனது கணவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். எனவே பேருந்து என்னிடமே இருக்கட்டும் அதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறிவந்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கரூரில் தங்களது ஆம்னி பேருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதை அறிந்த சித்ரா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலைச்செல்வனிடம் கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம் . இச்சம்பவம் குறித்து சித்ரா திருச்சி கமிஷனர் சத்யபிரியாவிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துவிட்ட நண்பனின் மனைவியை ஏமாற்றி ஆம்னி பேருந்துகளை அபகரித்துச் சென்றது. டிரான்ஸ்போர்ட் நடத்தி வருபவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது