திருச்சி சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்
- திருச்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் பிரதீப் குமார் தேசியக்கொடியறே்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
- விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 41 ஆயிரத்து 532 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
திருச்சி:
திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள முதலாம் உலகப் போர் நினைவு சின்னத்தில் கலெக்டர் மா.பிரதீப் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் சரியாக காலை 9.15 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 9.20 மணிக்கு உலக சமாதானத்தை உணர்த்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். மேலும் மூவர்ணம் பொருந்திய பலூன்களின் தொகுப்பும் பறக்க விடப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார் காவல்துறையினர் அரசு அலுவலர்கள் மற்றும் சமூக சேவை புரிந்த தனி நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலை துறை, வேளாண்துறை வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 41 ஆயிரத்து 532 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் தங்கள் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர், அரசு அலுவலர்கள் 318 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவரவர் வீடுகளுக்கு தாசில்தார்கள் சென்று பொன்னாடை அணிவித்து தியாகிகளை கௌரவித்தனர். இந்த விழாவில் 10 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தின விழா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை பார்வையிட மாணவர்கள் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் இன்றைய சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரளான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.