கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது
- தமிழக அரசு அறிவித்தபடி துறையூர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது
- முதல் மதிப்பூதியத்தை துறையூர் நகராட்சி கமிஷனர் நாராயணன் வழங்கினார்
துறையூர்,
தமிழக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போதைய திமுக அரசு, நகர்மன்ற தலைவருக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவருக்கு பத்தாயிரம், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்க உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக துறையூர் நகர மன்ற கூட்ட அரங்கில், மதிப்பூதியம் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையர் (பொ) நாராயணன், தமிழக அரசால் வழங்கப்பட்ட மதிப்பூதியத்திற்கான காசோலைகளை நகர மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதிப்பூதியத்திற்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.