டிரைவரை கடத்தி இரண்டு தினங்களாக சித்திரவதை
- முசிறியில் வட்டி பணம் கேட்டு டிரைவரை கடத்தி இரண்டு தினங்களாக சித்திரவதை செய்யப்பட்டு உள்ளது
- போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும் சகோதரர்கள் தலை மறைவு
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவில் வசிக்கும் ராஜசேகர் மகன் கண்ணன்(வயது 36). ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளத்தெருவில் வசிக்கும் நாராயணன் மகன்கள் ராஜபாண்டி (44), ஸ்ரீராம் (35) ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.30 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். அதற்கான வட்டி தொகை என தொடர்ந்து கட்டி வந்த நபர் தற்போது மூன்று மாதமாக வட்டி பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் மீது உள்ள ஒரு வழக்கு சம்பந்தமாக முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியில் வரும் பொழுது ஸ்ரீராம் என்பவர் கண்ணனை அழைத்து சென்று தனது வீட்டில் அடைத்து வைத்து, ராஜபாண்டியுடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளனர். மேலும் ராஜபாண்டி அவரது நண்பர்களை ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் அட்மிஷன் காக செல்லும்போது கண்ணனையும் காரில் அழைத்துச் சென்று துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். கண்ணன் மனைவி தங்கவல்லி மற்றும் இவர்களது குழந்தை லிகிஸ்(8), தர்ஷன்(7) ஆகிய மூவரையும் ஸ்ரீராம் வீட்டிற்குள் அடைத்து பூட்டி சென்றுள்ளார். குழந்தைகள் கூச்சல் இட்டு கத்திய பொழுது அருகில் குடியிருந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெளியே அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து தங்கவள்ளி முசிறி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். தங்கள் மீது புகார் செய்யப்பட்டதை அறிந்து கண்ணனை, ராஜபாண்டியும், ஸ்ரீராமும் விடுவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட கண்ணன், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித் து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக், ஆள்கடத்தல், அடித்து துன்புறுத்துதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகிய இருவரையும்தேடி வருகிறார்.