ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் உச்சக்கட்ட ஆபாசம்
- கோவில் திருவிழா ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் உச்சக்கட்ட ஆபாசமாக நடைபெற்றது
- நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது பழைய கோட்டை மேத்தக்கான்பட்டி கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் நீதிமன்ற அனுமதி பெற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேடையில் ஆடிய கலைக்குழுவினர்மிகவும் மோசமாக அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனம் ஆடியதாகவும், நடனத்தை பார்க்க வந்த 2,000-க்கும் மேற்பட்டோர் முன்பு நடனம் என்ற பெயரில் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நடன நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த தமிழ் நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் தலைமையிலான நிர்வாகிகள், மணப்பாறை டி.எஸ்.பி. ராமநாதனை நேரில் சந்தித்து இது குறித்து புகார் செய்தனர். அந்த புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடனம் ஆடியவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மற்றும் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆபாச நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது சமூக நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.