டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் 10 ஆயிரம் பங்கேற்பு-திருச்சியில் தலைவர் பேட்டி
- பாரதிய கிசான் சங்கம் சார்பில் டெல்லியில் வருகிற 19-ந்தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருச்சியில் நிர்வாகிகள் தெரிவித்தனர்
- மத்திய பா.ஜ.க. அரசு விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும்
திருச்சி:
பாரதிய கிசான் சங்க அகில பாரத துணைத் தலைவர் பெருமாள் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
மத்திய பா.ஜ.க. அரசு விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும். உழவர் சம்மான் நிதி, பி.எம். கிசான் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டம் எல்.ஐ.சி. மாதிரி தனிப்பட்ட விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதிலிருந்து சுமார் 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தையொட்டி இந்த போராட்டத்தை நாங்கள் நடத்த உள்ளோம்.
தென்னிந்தியாவிலிருந்து சுமார் 10,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது மாநில செயலாளர் வீரசேகரன், நிர்வாகிகள் குமார், வைத்தியநாதன், அன்பழகன், பெருமாள், கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.