உள்ளூர் செய்திகள்

திருச்சி காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் - அச்சத்தில் கரையோர மக்கள்

Published On 2022-08-31 07:20 GMT   |   Update On 2022-08-31 07:20 GMT
  • திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது.
  • இன்று காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் 41 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும், மீதமுள்ள 95 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டது.

திருச்சி:

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையிலிருந்து அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

இதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கினால் லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சாலை தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு விவசாயிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. நேற்று இரவு நிலவரப்படி 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது.

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேற்று காலை 6 மணி அளவில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலும், 93 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. பின்னர் மாலையில் நீர்வரத்து 1 லட்சத்து 36 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் 41 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும், மீதமுள்ள 95 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இந்த வெள்ள நீர் இன்று மதியத்துக்குள் முக்கொம்பு மேலணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் உயரும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே காவிரி பாய்ந்து ஓடும் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தற்போதுதான் வெள்ளம் குறைந்து சமீபத்தில்தான் வீடு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் அதிக அளவில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News