ரெயில்வே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
- திருச்சி ரெயில்வே பயிற்சிப் பள்ளியில் தங்கியிருந்தவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
- அம்மை நோயா? மாநகராட்சியினர் ஆய்வு
திருச்சி,
திருச்சி ரெயில்வே பயிற்சி மையத்தில் தங்கியிருந்தவர்களில் சிலருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.ரெயில்வே பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு திருச்சியில் அமைந்துள்ள மண்டல ரெயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் 400 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில், பயிற்சி மையத்தில் தங்கியிருந்த இருவருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பயிற்சி மையத்திலிருந்த சுமார் 10 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் பரவியது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோருக்கு ரெயில்வேதுறை சார்பில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரவர் விருப்பப்படி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதுக்குறித்த தகவலறிந்த திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், நகர்நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில், ரெயில்வே பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில், கடும் வெயில்தாக்கம் மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி) யினால் ஏற்பட்ட கொப்புளங்கள் என்பதும், அம்மை நோய் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பயிற்சி மையம் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை படுத்தப்பட்டுள்ளது.