- கல்லக்குடி அருகே 2௦௦ லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது
- தப்பி ஓடியவரை தேடி வரும் போலீசார்
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி தபை பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் சோதனையிட்டபோது தபை ஏரிக்கரையில் சாராய ஊறல் வைத்து இருந்தது கண்டறியப்பட்டது.4 லிட்டர் வடிகட்டிய சாராயமும், 200 லிட்டர் சாராய ஊறலும் அங்கு இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் விசாரணை செய்த போது மேற்கண்ட சாராய ஊறலை லால்குடி கள்ளக்குடி ராஜா டாக்கீஸ் எதிர்ப்புறம் உள்ள சிதம்பரம் சாலையில் வசிக்கும் தனபால் என்பவர் போட்டு வைத்திருந்ததாக தெரிய வந்தது. அவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 18 பேர் இறந்தனர். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லக்குடியில் சாராய ஊறல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.