உள்ளூர் செய்திகள் (District)

நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா

Published On 2023-04-01 08:52 GMT   |   Update On 2023-04-01 08:52 GMT
  • பங்குனி தேர்த்திருவிழாவை யொட்டி வீதி உலா
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி,

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.நம்பெருமாள் கடந்த 29-ந்தேதி இரவு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.திருவிழாவின் 4-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். இதையொட்டி காலை 8 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து காலை 9.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.

பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணியளவில் வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.5-ம் நாளான இன்று நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.2-ந் தேதி நம்பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.விழாவின் 9ம் நாளான 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்-ரெங்நாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம்(கோரதம்) வரும் 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.விழாவிற்கான கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News