உள்ளூர் செய்திகள்

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 80 வயது முதியவர் - மின்கோபுர சிமெண்ட் கட்டை பிடித்து தப்பினார்

Published On 2022-08-04 09:35 GMT   |   Update On 2022-08-04 09:35 GMT
  • நல்லுக்கவுண்டர் (வயது 80). கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு திருச்சிக்கு வந்தார்.
  • வெள்ள நீரின் போக்கில் நீச்சல் அடித்துக் கொண்டே சென்ற முதியவர் ஆற்றின் நடுவில் மின்கோபுரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டையை பிடித்து ஏறி விட்டார்.

திருச்சி :

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்தவர் நல்லுக்கவுண்டர் (வயது 80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு திருச்சிக்கு வந்தார். பின்னர் கிடைக்கும் வேலையை செய்து கடை வராண்டாவில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் நேற்று இரவு யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரை யோரம் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டார். அடுத்த நொடி அவரை வெள்ளம் இழுத்துச் சென்று விட்டது. வெள்ள நீரின் போக்கில் நீச்சல் அடித்துக் கொண்டே சென்ற முதியவர் ஆற்றின் நடுவில் மின்கோபுரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டையை சமயோசிதமாக பிடித்து அதில் ஏறி விட்டார்.

பின்னர் கடும் குளிரில் நடுங்கியபடி தன்னை காப்பாற்றுமாறு சப்தம் எழுப்பினார். இதைப் பார்த்தவர்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி, சக்திவேல் மூர்த்தி, சந்திரசேகர், மணிகண்டன் பிரபு உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் கயிறு கட்டி ரப்பர் படகில் சென்று முதியவரை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் நீச்சல் அடித்து சென்று மின் கோபுரத்தை பிடித்து தப்பிய முதியவரின் துணிச்சலை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். மேலும் அவருக்கு ஆயுசு நூறு என்று கூறி கலைந்து சென்றனர். தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கையால் உயிர் பிழைத்த முதியவரை அனைவரும் பாராட்டினர்.

Tags:    

Similar News