திருச்சி மத்திய சிறைச்சாலை சார்பில் 2 பெட்ரோல் பங்க்குகளுக்கு அனுமதி
- திருச்சி மத்திய சிறைச்சாலை சார்பில் 2 பெட்ரோல் பங்க்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சிறைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்க உள்ளனர்
திருச்சி :
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் மூலம் பல்வேறு சிறு தொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் சார்ந்த படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது. கைதிகளாக சிறைக்குள் வருபவர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக வெளியில் செல்லும் அளவுக்கு அவர்கள் பக்குவப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கைதிகள் தாங்கள் பெற்ற பயிற்சியின் பலனாக மத்திய சிறைச்சாலைகளில் கரும்பு, நெல், சோளம் உள்ளிட்டவைகளும், காய்கறிகளும் பயிரிட்டு பராமரிக்கின்றனர். அவை குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மீன்கள் வளர்க்கப்பட்டு குறிப்பிட்ட தினங்களில் கைதிகள் மூலம் சிறைச்சாலைக்கு வெளியே விற்கப்படுகிறது.
திருச்சி மத்திய சிறையில் நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள கைதிகள் மூலம் சிறைக்கு வெளியே வேளாண் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறைக்குள் தொழிற் கூடங்களும் இயங்கி வருகின்றன. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் கைதிகள் தயாரித்த முகக்கவசங்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கைதிகள் மூலம் சிறைத் துறையினர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதுக்கோட்டை, வேலூர், சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை இயக்கி வருகின்றனர். இந்த திட்டமானது கடந்த 2019-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது திருச்சி மத்திய சிறைக்கு இரண்டு பெட்ரோல் பங்குகளை இயக்கும் அனுமதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்குகளை திருச்சி மத்திய சிறைச்சாலை முன்புள்ள சிறை பஜார் அருகாமையிலும், காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மகளிர் சிறைச்சாலை வளாகத்திலும் சிறைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் கைதிகள் பணி அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இது கைதிகளின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் விரைவில் சென்னை, சேலம், கோவை, மதுரை ஆகிய இடங்களிலும் மத்திய சிறைகளின் வெளிப்புற வளாகங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இது சிறை கைதிகள் பொது தொடர்பை பெறுவதற்கான சிறந்த வழியாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வெற்றிகரமாக இயங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.