உள்ளூர் செய்திகள்

வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதி

Published On 2023-03-20 08:52 GMT   |   Update On 2023-03-20 08:52 GMT
  • கழிவு நீருடன் மழை நீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம்
  • குடியிருப்புவாசிகளே பொக்ளைன் வரவழைத்து கழிவு நீரை வெளியேற்றினர்

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது.இந்த நிலையில் திருநகர் மெயின் ரோடு பகுதியில் நடைபெறும் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்தனர். இதனால் கடந்த சில தினங்களாக திருநகர் 5,6,7 கிராஸ் பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் தேக்கமடைந்தது. இதற்கிடையே நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஏற்கனவே நிரம்பியிருந்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்து விட்டது.இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக குடிநீர் பைப் அமைந்துள்ள பகுதிகளிலும் சாக்கடை நீர் நிரம்பியுள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறும்போது,மெயின் ரோட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளுக்காக கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்துள்ளனர். இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இப்போது வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் வந்துவிட்டது.இன்னும் இந்தபணிகள் இரண்டு வாரத்துக்கு நீடிக்கும் என சொல்லப்படுகிறது.எனவே கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது கழிவுநீரை வேறு வழியில் திருப்பிவிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போன்று அவ்வப்போது எங்கள் பகுதிக்கு குறைந்த அளவே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர்.நேற்று பெய்த கனமழையின் போது குடியிருப்பு வாசிகளாகிய நாங்களே ஒரு ஜேசிபி எந்திரத்தை வரவழைத்து ஒரு பகுதியில் சாக்கடை நீரை உடைத்து வெளியேற்றினோம் என்றனர்.

Tags:    

Similar News