திருச்சி கல்லூரியில் இளையோர் இன்னும் ஏற்றமுற சிறப்பு கருத்தரங்கம்
- திருச்சி கல்லூரியில் இளையோர் இன்னும் ஏற்றமுற சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி
- 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர்
திருச்சி:
திருச்சி புனித வளனார் கல்லூரியில் புனித லூர்தன்னை ஆலய வளாகத்தில் உள்ள தெரேசா மக்கள் மன்றத்தில் இஞ்ஞாசியார் வழியில் உயர்வையே நோக்கிய உன்னதம் என்ற மைய நோக்கோடு இளையோர் இன்னும் ஏற்றமுற... என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்பா இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர். புனித லூர்தன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், இஞ்ஞாசியாரின் தாராள மனம் வேண்டி என்ற ஜெபத்துடன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
இக்பா அமைப்பின் செயலாளர் முனைவர் எஸ்.பி.பெஞ்சமின் இளங்கோ வரவேற்றார். புனித வளனார் அறிவியல், கலைமனைகளின் அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ ஆசியுரையில் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பங்குகளில் இருந்து 91 இளையோர் பங்குபெறுவது இக்பாவின் வெற்றி வரலாற்றின் முதல் படி என்று குறிப்பிட்டு வாழ்த்தினார்.
முதல் அமர்வு கருத்துரை யாளராக மாநில ஆலோசகர் மரிய அன்னராஜ் ஐக்கப் இளையோருக்கான இனிகோ என்ற தலைப்பில் ஆளுமைப் பண்புகளை மேலும் மேலும் வளர்த்து உயர்வடைய உன்னத வழிமுறைகளை விளக்கினார்.
இரண்டாவது அமர்வில் மதுரை லொ யோலா தொலைக்காட்சி இயக்குநர் சேவியர் அந்தோனி எழுவீர், எழுவீர் இளையோரே என்ற தலைப்பில் மதர் தெரேசா வின் தாராளமனதுடன் ஆற்றிய அரும்பணி பற்றியும், தன்னுடைய நிறை, குறைகளை இறைவனிடம் ஒப்படைத்து, அல்லவை நீக்கி நல்லவை பெருக்கும் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகளை கண்ணதாசன் அற வுரைகளைப் பற்றியும், மனித வாழ்வு கெடும் பல்வேறு நிலைகள் பற்றிய பழமொழிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
இளைய கடவுள் எங்கள் இயேசு என்ற மறையுரை யுடன் திருப்பலியை திருச்சி குருகுல முதல்வர் எல்.அந்துவான் நிறைவேற்றினார். இளையோரே முக்காலத்தையும் இணைக்கும் தலைவர்கள் என்று வாழ்த்தினார்.
மூன்றாம் அமர்வில் திருச்சி கார்மல் சமூக சேவை மைய இயக்குநர் சுரேஷ் வாருங்கள், இளையோரே, வரலாறு படைக்க என்ற தலைப்பில் இன்றைய மாய உலகில், இளையோர் பெற வேண்டிய தலைமைப் பண்புகளை இடுக்கண் என்ற குறும்படம் மூலம் விளக்கினார்.
இறுதி அமர்வில் திருச்சிலுவை கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி இளை யோரோடு எனது அனுபவம் என்ற தலைப்பில் இயேசுவோடு பவுல் வாழ்ந்ததைக் குறி ப்பிட்டு நாமும் அப்படியே இயேசுவின் வல்லமையில் என்றும் நிறைவாழ்வு வாழவேண்டும் என்று எழுச்சியுரை ஆற்றினார்.
இக்பா தலைவர் முனைவர் கே.எஸ்.அருள் சாமி நன்றி தெரிவித்து பேசுகையில், வருங்காலத்தில் இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு, ஆளுமைத்திறன், இனிகோ வழியில் ஆன்மீகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று சிறந்த இறைமக்களாக விளங்க இக்பா மாதந்தோறும் பயிற்சிகளை சிறந்த வல்லுநர் குழு மூலம் நடத்தும் என்று உறுதி அளித்தார்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழும், சேவியர் அந்தோனி எழுதிய இளையோருக்கான இனிகோ என்ற ரூ.500 மதிப்புள்ள அரிய நூல் முனைவர் ச.சாமிமுத்து குடும்பத்தினரின் நிதிய ஏற்பாட்டால் இலவசமாக வழங்கப்பட்டது.