உள்ளூர் செய்திகள்

திருச்சி மத்திய சிறை முன்பு முற்றுகை போராட்டம்-64 பேர் கைது

Published On 2022-06-29 09:31 GMT   |   Update On 2022-06-29 10:30 GMT
  • திருச்சி மத்திய சிறை முன்பு இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
  • 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

திருச்சி:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையை உடனடியாக இழுத்து மூட வேண்டும், 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தில் தீக்குளித்த ஈழத் தமிழர் உமாரமணன் என்பவருக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள் கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷரீப், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருச்சி மத்திய சிறை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 64 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News