உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சிதுறையினருடன் திருச்சி கலெக்டர் ஆலோசனை

Published On 2022-08-19 09:55 GMT   |   Update On 2022-08-19 09:55 GMT
  • செப்டம்பர் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 23-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
  • செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரகப் பகுதிகளில் பசுமையையும், தூய்மையையும் உருவாக்குகின்ற வகையில், இந்த மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு சுகாதார முகாமான "நம்ம ஊரு சூப்பரு'' திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள் பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை திட, திரவ கழிவு மேலாண்மை தொடர்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 3-ந்தேதி முதல் செப்டம்பர் 16-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும், செப்டம்பர் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 23-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,

செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அனைத்து அரசு அலுவலர்களும் முழு அளவில் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும், திருச்சி மாவட்டத்தில் இச்சிறப்பு முகாமினை வெற்றிகரமாக செயல்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News