உள்ளூர் செய்திகள்

திருச்சி நகைகடைகளில் சோதனை - அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய ஆவணங்களில் ரகசிய குறியீடுகள்

Published On 2023-11-22 06:32 GMT   |   Update On 2023-11-22 06:33 GMT
  • திருச்சியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
  • இந்த சோதனையின் காரணமாக கடத்தல் தங்கம் வாங்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

திருச்சி

தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்வதாகவும், சட்டத்துக்கு புறம்பாக கள்ள சந்தையில் தங்கம் மற்றும் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் அமலாக்கத் துறையினருக்கு புகார்கள் சென்றன. அந்த வகையில் சென்னையில் 6 நகை கடைகளில் அமலாக்கத் துறையினர் 2 தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

திருச்சி ஜாபர் ஷா வீதியில் உள்ள 3 ஜுவல்லர்களிலும், பெரிய கடைவீதியில் உள்ள ஒரு ஜூவல்லரிலும் மற்றும் அதன் 3 உரிமையாளர்கள் வீடுகளிலும் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில் 2 கடைகளில் நடத்தப்பட்ட சோதனை நேற்று மதியம் 12 மணியளவில் நிறைவு பெற்றது. மற்ற கடைகளில் நடந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

சென்னையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நகைக்கடைகளில் இருந்து திருச்சியில் உள்ள இந்த நகைக்கடைகள் தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளுக்கு கொடுத்து நகைகளாக விற்பனை செய்து வந்ததாக கூறப்பட்டது.

இதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள்,ரொக்க பணம் கைப்பற்றப்பட்டு

ள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கக் கட்டிகளை வாங்கி அதை நகைகளாக மாற்றி விற்பனை செய்த வகையில் சங்கேத மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் கட்டு கட்டாக சிக்கி உள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட தங்கத்துக்கும் இருப்பில் இருந்த மற்றும் விற்பனை செய்யப்பட்ட தங்கத்துக்கும் தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சோதனையின் காரணமாக கடத்தல் தங்கம் வாங்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News