உள்ளூர் செய்திகள் (District)

துறையூரில் திருட்டு வழக்கில் இருவர் கைது-ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்

Published On 2023-05-25 06:13 GMT   |   Update On 2023-05-25 06:13 GMT
  • துறையூரில் திருட்டு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்
  • அந்தோணிராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 32). இவர் கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த கோபிநாத் மீண்டும் கோவை செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்து இல்லாததால் பயணிகள் காத்திருப்போர் பகுதியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கோபிநாத் அசந்து இருந்த நேரத்தில் இவரது பையில் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.இது தொடர்பாக கோபிநாத் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் செல்போன்களை திருடியவர் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஜெகனை கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.இதேபோன்று துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (51). இவர் சம்பவத்தன்று தனது நண்பருடன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரின் பையில் இருந்த பர்சை திருடிக் கொண்டு ஓடியுள்ளார். இதையடுத்து நண்பரின் உதவியுடன் பர்ஸ் திருடிய நபரை மடக்கி பிடித்து துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பர்ஸ் திருடிய நபர் மயிலாடுதுறையை சேர்ந்த அந்தோணிராஜ் (34) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்தோணிராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News