திருச்சி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் கதி என்ன? 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
- முகேஷ் குமார் தனது புத்தகப்பை, யூனிபார்ம் ஆகியவற்றை கழட்டிவிட்டு காவிரி ஆற்றில் குளித்துள்ளார்.
- அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
திருச்சி :
திருச்சி ஜீவா நகரை சேர்ந்த சிட்டி என்பவரின் மகன் முகேஷ் குமார் (வயது 16). இவர் மரக்கடை பகுதியில் உள்ள சையது முதுர்ஷா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், தனியாக புறப்பட்ட அவர் திருச்சி சிந்தாமணி காவிரி படித்துறைக்கு சென்றுள்ளார். அங்கு தனது புத்தகப்பை, யூனிபார்ம் ஆகியவற்றை கழட்டிவிட்டு காவிரி ஆற்றில் குளித்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டும், காப்பாற்ற முயன்றும் எந்தவித பலனும் இல்லை. இதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்பு மீண்டும் இன்று காலை முதல் தொடங்கி தேடும் பணி நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாணவனை வெகு தூரத்துக்கு ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. பிளஸ்-2 மாணவன் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியில் கடந்த ஜூலை 18-ந்தேதி மயங்கிய நிலையில் ஒருவர் விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி 24-ந்தேதி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவருக்கு சுமார் 50 வயதிருக்கலாம். கருப்பான தேகத்துடன் நெற்றியில் காயம் பட்ட தழும்பு மற்றும் இடது காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதற்கான தழும்புகள் உள்ளன. இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால், நீதிமன்ற காவல் நிலையத்தை நேரிலோ அல்லது காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.