காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் நடந்தது
- குடிநீர் வழங்க கோரி நடைபெற்றது
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளுக்கும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர் கடந்த சில வாரங்களாக வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த துறையூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி அதிகாரியிடம் குறைகளை தெரிவிக்க பொதுமக்களை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள், தங்களது பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க கோரியும், குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அங்கிருந்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகராட்சி அலுவலர்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் பிரதான சாலையில், குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.