போக்குவரத்து போலீசாரின் மாற்று ஏற்பாட்டிற்கு பலன் இல்லை
- நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிப்பு
- திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவிப்பு
திருச்சி,
திருச்சி மாநகரில் பிரதான வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும், மற்றங்களையும் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில், மாற்று பக்க வாகன நிறுத்தும் திட்டத்தை மாநகர போக்குவரத்து போலீசார் அமல்படுத்தினர்.அதன்படி சாலை ரோடு மற்றும் மெயின் கார்டு கேட் (வலது) ஆகிய இடங்களில் சாலையோரம் வாகனங்கள் ஒருபுறம் 15 நாட்களுக்கும், மறுபுறம் அடுத்த 15 நாட்களுக்கும் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. மதுரை ரோட்டில் ஒரு நாள் இடது பக்கமும், மறுநாள் வலது புறமும் பார்க்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த விதிமுறைகளை வாகன ஓட்டிகள் தொடர்ந்து மீறுகின்றனர்.கடந்த சில வாரங்களாக சாலையோரத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகளில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. குறிப்பாக சாலை ரோடு மற்றும் மெயின் காடு கேட் பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் இரு பக்கத்திலும் வாகனம் நிறுத்தும் போது வேகமாக செல்லும் வாகனங்களால் பயணிகளும் அப்பகுதியை கடப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.மரக்கடை பகுதியில் ஒரு நாள் மற்றும் மறுநாள் பார்க்கிங் விதிகளை ஏற்க வாகன ஓட்டிகள் மறுக்கிறார்கள். மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி பலனளிக்காமல் உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினரிடம் கேட்டபோது,நாங்கள் அவ்வப்போது கண்காணித்து போக்குவரத்து பாதையை சரி செய்து வருகிறோம். ஆனால் சில வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.