திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கே.கே. நகர்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களூக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.