தார்ப்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றி செல்லும் லாரிகள்
- மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
- பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதிர வேலூர், பாலுரான்படுகை பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து தினமும் பல லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது.
அவ்வாறு, மணல் ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர்கள் பெரும்பாலும் தார்பாய் கொண்டு மூடாமல் மணல் எடுத்து செல்வதால் காற்றில் மணல் பறந்து சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சில இடங்களில் மணல் சாலையில் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர்.
மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் கண், மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.
எனவே, மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கட்டாயம் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என குவாரி உரிமையாளர்கள், நிர்வாகிகள், லாரி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
அவ்வாறு, தார்ப்பாய் கொண்டு மூடாமல் எடுத்துச் செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.