உள்ளூர் செய்திகள்

டியூசன் எடுப்பவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published On 2022-08-09 02:09 GMT   |   Update On 2022-08-09 02:09 GMT
  • தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை :

பள்ளி கல்வித்துறையில் 38 வருவாய் மாவட்டங்களாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கற்பித்தல் பணியில்...

* தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்ட தேர்வு குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்ய வேண்டும். மாவட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை, மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு வருகிற 14-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அந்த பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்வு குழு இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.

* அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது.

* பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றசாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொதுசேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.

* அரசியலில் பங்குபெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கக்கூடாது. கல்வியினை வணிகரீதியாக கருதி செயல்படும் (டியூசன் எடுப்பவர்கள்) ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News