உள்ளூர் செய்திகள்

வீட்டில் ½ கிலோ வைரக்கற்கள் பதுக்கிய 2 பேர் கைது- வனத்துறையினர் தீவிர விசாரணை

Published On 2023-02-09 03:48 GMT   |   Update On 2023-02-09 03:48 GMT
  • பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள், கைதான 2 பேரும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வைரக்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஹெட்சன் மற்றும் போலீசார் நேற்று கீழப்பத்தையில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 2 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கீழப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 42), மஞ்சுவிளையை சேர்ந்த சுசில்குமார் (57) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் வைரக்கற்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், சுமார் ½ கிலோ வைரக்கற்களையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள், கைதான 2 பேரும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனச்சரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுசில்குமார், வேல்முருகன் ஆகியோருக்கு வைரக்கற்கள் எப்படி கிடைத்தது? மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதா?, எங்கிருந்தாவது கடத்தி வரப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைதான சுசில்குமார், முன்னாள் கிராம வனக்குழு தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News