சூளகிரி உள்பட பல இடங்களில் கைவரிசை: தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
- சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர்.
- அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதியில் சமீப காலமாக கால்நடைகள், கடைகள், வீடுகளில் திருடும் சம்பவம் நடந்து வந்தது.
இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார்தாகூர் உத்தரவிட்டார். அதன் பேரில், ஓசூர் உட்கோட்ட டி.எஸ்.பி. பாபுபிரசாந்த் மேற்பார்வையில், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று காலை, சூளகிரி அருகே சின்னார் பகுதியில் சூளகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
சந்தேகமடைந்த போலீசார், அவர்களை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த சதீஸ் (வயது34), முஸ்லீம் தெருவை சேர்ந்த சாதிக் மகன் மகபூப் (21) ஆகிய இருவரும் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த 11 செல்போன்கள், நகை, கொலுசு உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இருவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையில் அடைத்தனர். மேலும். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.