- அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர்.
- கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் இளங்கோ தலைமையில், பறக்கும்படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, 5-வது வார்டுக்குட்பட்ட முனுசாமி தெரு, குடிநீர் தொட்டி அருகில் 50 கிலோ அளவில், 19 மூட்டைகளில், 950 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்ட அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகில், 50 கிலோ அளவிலான, 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அப்போது அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிபட்டி ராஜா (40), வெங்கடேசன் (27) என்பதும், கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 2,050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.