குமாரபாளையம் அருகே அனுமதியின்றி மரம் வெட்டி கடத்தல்
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் வெட்டிய மரம் குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் உள்ள புருஷோத்தம பெருமாள் கோவில் பின்புறம் உள்ள அரசு இடத்தில் நன்கு வளர்ந்த பெரிய மரம் ஒன்றை அப்பகுதியினர் வெட்டினர். இது குறித்து சிலர் கேட்ட போது, ஊராட்சி தலைவரிடம் அனுமதி பெற்றுதான் வெட்டினோம் என்றனர். ஊராட்சி தலைவி புஷ்பா, அவரது தகப்பனார் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்துவிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
அந்த இடம் அரசுக்கு சொந்தமானது. அரசு அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் கருத்தை அறிய வேண்டும். அதன் பின்தான் மரம் வெட்ட முடியும் என்று கூறினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வி.ஏ.ஒ. தியாகராஜன் கூறியதாவது: அனுமதிஇல்லாமல் மரத்தை வெட்டியது தவறு. வெட்டியவர்கள் குறித்து விசாரணை செய்து மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஒ., தாசில்தார் உத்திரவின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.