திருமருகல் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்
- பொதுமக்கள் 10 ஆயிரம் மின்இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
- அனைத்து அரசு அலுவலகம், போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த கீழக்கரையிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மூலம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 50 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் 10 ஆயிரம் மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுந்து விடுவதால் மின்வினியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு குறைந்த அளவு மின்சாரம் வருவதால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின்சாதனங்கள், உபயோக பொருட்கள் பழுதடைந்து வருகிறது.இதனால் திருமருகல் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருமருகல் அரசு ஆஸ்பத்திரி, வேளாண்மை அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலகம்,போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
எனவே திருமருகல் பகுதிகளில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை புதிதாக மாற்றியமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.