ஆறுமுகநேரி பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்- நேரில் ஆய்வு நடத்திய கலெக்டர் செந்தில்ராஜ் அறிவிப்பு
- ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
- கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் வழங்கினார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார். இதில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், புனிதா, தீபா, புனிதா சேகர், சந்திரசேகர், தயாவதி, ஜெயராணி, ஜெபமணி, மரிய நிர்மலா தேவி, சிவகுமார், சகாயரமணி, ஆறுமுகநயினார் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் வார்டுகளின் தேவைகள் பற்றி கலெக்டர் கேட்டறிந்தார்.
ஆறுமுகநேரி காமராஜர் பூங்காவை நவீன வசதிகளுடன் சீரமைக்க வேண்டும். ஆறுமுகநேரிக்கு குரங்கணியில் இருந்து தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள குப்பை மேடு அகற்றப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை வசம் உள்ள அந்த இடத்தை தினசரி சந்தை அமைப்பதற்காக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தர வேண்டும்.
மேலும் பேரூராட்சியின் குப்பை களை கொட்டுவத ற்காக 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஒதுக்கி தர வேண்டும். காயல்பட்டினம் வருவாய் கிராம அலுவலகத்தின் கீழ் உள்ள ஆறுமுகநேரியின் 10 வார்டு பகுதிகளை ஆறுமுகநேரி வருவாய் கிராம நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் கலெக்டரிடம் வழங்கினார்.
அவரிடம் மனுவில் கூறியுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.
இதனைத் தொடர்ந்து காமராஜர் பூங்காவை கலெக்டர் பார்வையிட்டார். ஆறுமுகநேரி ெரயில் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப் பட்டுள்ள வளாகம், வேளாண்மை விரிவாக்க மையம், அங்கன்வாடி ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் மாலா, நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகி யோரும் உடன் இருந்தனர்.