கலெக்டர் தடையை மீறி மருதமலையில் குவிந்த வாகனங்கள்
- பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வலைதளத்தில் பரப்பினர்
- சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா? என கேள்வி
வடவள்ளி,
மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு பின் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. நேற்று சூரசம்ஹாரம் மற்றும் இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த 2 முக்கிய விழாக்களிலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் மலைப்பாதை வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கலெக்டர் கிராந்திகுமார் பாடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரும் 2 நாட்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தார். இதனால் பக்தர்கள் கோவில் பஸ்களிலும், நடைபாதை வழியாகவும் சென்றனர்.
இன்று காலை நடை பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சென்றனர். முதியவர்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு மலையை அடைந்தனர். அங்கு சென்று பார்த்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவில் வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் நின்றன.
அந்த கார்களை பார்த்த தும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை மட்டும் கால்நடையாக மலையேறச் செய்து விட்டு அவர்களை மட்டும் எப்படி காரில் வர அனுமதித்தனர் என ஆதங்கப்பட்டனர். சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததை தங்கள் செல்போனில் படமும் பிடித்து வலைத ளத்தில் பரப்பினர்.
இதுமட்டுமல்லாமல் திருக்கல்யாண நிகழ்ச்சி யின் முன்வரிசையிலோ, அருகிலோ சாதாரண பக்தர்களால் செல்ல முடிய வில்லை. அவரவர்களுக்கு வேண்டியவர்களை முன்வரிசையில் அமரச் செய்து இருந்தனர். சாதாரண பக்தர்கள் வெகு தொலையில் நின்றபடியே சாமியை தரிசித்து விட்டுச் சென்றனர்.
இதனால் இனி வரும் காலங்களிலாவது அதிகாரிகள் அனைவரையும் சமமாக பாவித்து தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக மலை அடிவாரத்தில் உள்ள டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டபோது தங்களுக்கு 86 வாகனங்களை மலைப்பாதையில் அனுமதிக்க பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.